X

கேரளாவில் தொடரும் கன மழை – 8 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவின் வட மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இடை விடாது மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சில அணைகள் நீர்ப்பிடிப்பு கொள்ளளவை எட்டி வருகின்றன. வயநாடு மாவட்டத்தில் உள்ள காராப்புழா மற்றும் பாணா சுரசாகர் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் 4 ஷட்டர்கள் இந்த சீசனில் முதல் முறையாக திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மூக்கைப்புழா, கல்லத்தி, பாரதப்புழா ஆகிய ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடலோரப் பகுதியில் பல வீடுகள் பலத்த காற்று மற்றும் மழையால் சேதமடைந்துள்ளன. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கன மழை காரணமாக இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.