Tamilசெய்திகள்

கேரளாவில் தொடரும் கன மழை – இன்று 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் 11 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், திருச்சூர், பாலக்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.