கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவுக்கு அடுத்த 5 நாட்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் கேரளாவுக்கு புயலால் பாதிப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவில் அதிக மழை பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்திற்கு பதில் இம்மாத மத்தியில் தொடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.