கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைவாக தான் பெய்யும் – கொச்சி வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யும்.
இந்த மழை கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் பலன் கொடுக்கும் என்பதால் தென்மேற்கு பருவமழையை பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த ஆண்டு தாமதமாக கடந்த 8-ந்தேதி தான் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.
சில நாட்கள் இந்த மழை தீவிரமாக பெய்ததால் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை பெய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை சில வாரங்களுக்கு பெய்யவில்லை. கடந்த வாரம் மாநிலம் முழுவதும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு இந்த மழை கனமழையாக மாறியதால் பாலக்காடு மாவட்டத்தில் 2 சென்டி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. இடுக்கி மாவட்டத்தில் ஒரு சென்டி மீட்டரும், திருவனந்தபுரத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
ஆனால் அதன்பிறகு மழை மீண்டும் குறையத் தொடங்கியது. தற்போது கேரளாவில் சில மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்பாக கொச்சி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் குறைவான அளவே பெய்யும். வருகிற 29-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் மிகவும் குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது அரபிக்கடல் நடுப்பாகத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் 29-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.