X

கேரளாவில் கொரோனா நோயாளி கற்பழிப்பு – ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த சுகாதார பணியாளர்கள் அந்த பெண்ணை பந்தளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்சில் சென்ற அந்த பெண்ணை டிரைவர் நவுபல், பலாத்காரம் செய்துவிட்டார். அதன்பின்பு அவர், அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு பேசியதை நோயாளி பெண், செல்போனில் பதிவு செய்து போலீசாரிடம் அளித்து புகார்கொடுத்தார். இதையடுத்து பந்தளம் போலீசார் டிரைவர் நவுபலை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா வருத்தம் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் ஆம்புலன்சு டிரைவர்கள் குறித்த விபரங்களை உடனடியாக பரிசீலித்து அவர்களின் தகுதி குறித்த அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே சுகாதார துறையில் நடந்த இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரள சுகாதார துறை மந்திரி சைலஜா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி கேரளாவில் போராட்டங்களும் நடந்தன. பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவ அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். என்றாலும் கேரளா முழுவதும் இச்சம்பவங்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.