கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் ரூ300 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அமலாக்கத் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். அதில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த இந்த மோசடி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்-மந்திரி பினராய் விஜயனின் மந்திரி சபையில் இருந்த, தற்போதைய எம்.எல்.ஏ. மொய்தீன், வடக்கஞ்சேரி நகரசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் அரவிந்தாஷன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணையின் போது தன்னை அமலாக்கத் துறையினர் தாக்கியதாக அரவிந்தாஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் அரவிந்தாஷனை வடக்கஞ்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணிபுரிந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவரும் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.