கேரளாவில் குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்
கேரளாவில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று நாடுமுழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் அதிரடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும், கண்காணிப்புக்கும் உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்ட எல்லைகளில் நேற்று கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கண்காணிப்பு பணிகள் தொடர்ந்தன. மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட்டுகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களும் சோதிக்கப்பட்டன. செக் போஸ்டுகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கண்காணிப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களும் கேரள எல்லையில் அமைந்து இருப்பதால் இன்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கேரள ஜெப கூட்டத்தில் கைவரிசை காட்டியது போல தமிழகத்திலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடப்பதால் அதன் தாக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாமா என்ற சந்தேகமும் விசாரணை குழுக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. எனவே யூதர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்பாடு செய்யும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் யூதர்களுடன் தொடர்புடைய 5 கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யூதர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயம் தமிழகத்தில் சென்னை, கொடைக்கானல் உள்பட 5 இடங்களில் உள்ளது. கொடைக்கானலில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தொடர் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தலங்களிலும் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவை தவிர பிரபல கிறிஸ்தவ ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நேற்று பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரெயில்களில் சோதனையை அதிகரிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் முழுமையாக சோதிக்கப்பட்டன.
அந்த ரெயில்களில் சென்ற பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்கள் தவிர மிகப்பெரிய வணிக வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் விமான நிலையத்திலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி பெற்ற வெடிபொருள் விற்பனையாளர்கள் பலர் உள்ளனர். பல இடங்களில் அனுமதி இன்றியும் வெடி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள வனத்துறையினரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கோவையில் அதிகபட்ச கண்காணிப்பு நடந்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவையில் அதிரடி படையினர் ரோந்து வர உத்தரவிடப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடந்து வருகிறது. சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி விடிய விடிய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில தகவல்களை தெரிவித்து உள்ளனர்.
அதன் அடிப்படையிலும் சோதனை நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கோவையில் மட்டும் 100 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.