உலகையே மிரள வைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நோயாளி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் வரை கேரளாவில் 27 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர்.
நேற்று காசர்கோட்டைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரையும் சேர்த்து இன்று வரை கேரளாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. திருமணங்கள் நடத்த தடை, பொது இடங்களில், வியாபார தலங்களில் அதிகமானோர் திரளக்கூடாது என்று கூறியது.
அரசின் உத்தரவை தொடர்ந்து சுற்றுலா தலங்கள், மால்கள், விற்பனை நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கேரளாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கேரளாவில் இதே நிலை நீடித்தால் அரசும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வர கேரள நிதித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து கேரளாவை மீட்டு வர பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொழில்துறை, சினிமாத்துறை, போக்குவரத்து துறையினருக்கும், ஏழை மக்களுக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.20 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானம் இழந்து நிற்கும் மக்களுக்கு கடன் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடும்பஸ்ரீ அமைப்புகள் மூலம் இக்கடன் வழங்கப்படும். ரூ.1000 ஆயிரம் கோடிக்கு கிராமிய தொழில் உறுதி திட்டம் நிறைவேற்றப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை முன் கூட்டியே வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாத ஓய்வூதியம் சேர்த்து வழங்கப்படும். இதற்காக ரூ.1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.
கேரளா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரேஷன் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அந்தியோதியா பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
கேரளாவில் சலுகை விலையில் மதிய உணவு வழங்க ஆயிரம் உணவகங்கள் வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த உணவகங்களில் ரூ.20-க்கு மதிய உணவு வழங்கப்படும்.
கேரளாவில் அவசர சுகாதார திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டு விடும்.
ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். பஸ்களுக்கும் வரிச்சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரியையும் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.