‘வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்களின் மனதில் நிற்பவர் யார்?’, என்ற பாடல் வரிகளுக்கேற்ப எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் மக்கள் மத்தியில் குறையவில்லை. இன்றைக்கும் எம்.ஜி.ஆரை நினைத்து வருத்தத்துடன் காலத்தை அசைபோடுவோர் ஏராளம். 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னையை அடுத்த ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டபோது அனைவருமே பதறிப்போனார்கள். அதேபோல கேரளா மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், எம்.ஜி.ஆர். குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீடு சிதிலமடைந்து உள்ளது என்ற செய்தி, படிப்போரை கண்கலங்க செய்தது.
எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தபோதிலும், சிதிலமடைந்து நிற்கும் அந்த வீட்டை யாருமே சீரமைக்க முன்வராதது வேதனை தரும் செய்தியாகி போனது. இதுகுறித்த செய்தி, அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவரும், மனிதநேயம் அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி பார்வைக்கு சென்றது.
இதையடுத்து சைதை துரைசாமி உடனடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த பழமையான இந்த வீட்டை மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் சீரமைத்து புதுப்பித்து தருவோம். சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வெகுவிரைவில் ‘சத்திய விலாஸ்’ (வீட்டின் பெயர்) வீட்டை புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைப்போம்”, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து மனிதநேயம் மையத்தின் செலவில் வீடு புதுப்பிக்கும் பணிகள் தீவிரமானது. சைதை துரைசாமியும் அடிக்கடி கேரளா சென்று அப்பணிகளை பார்வையிட்டார். இந்தநிலையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிற 26-ந் தேதி திறப்பு விழா காண இருக்கிறது.
இதுகுறித்து சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் திலகம் புரட்சித்தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர். தனது இளம் வயதில் தவழ்ந்து விளையாடிய வடவனூர் இல்லம் மிகவும் பழுதடைந்து முட்புதர்கள் மண்டி கிடப்பதாகவும், எந்தவித பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த இடத்தை யாருமே சீரமைக்க முன்வரவில்லை என்று செய்திகள் வெளியானது.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், நானே நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு, எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குடும்பத்தினரிடம் முறையான ஒப்புதல் பெற்று, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வி மையம் சார்பில் வீட்டின் தொன்மை மாறாமல் சீரமைத்தது. எம்.ஜி.ஆர். காலமெல்லாம் நேசித்த மழலையர் அங்கன்வாடி மையம், உணவுக்கூடம், மழலையர் விளையாட்டு திடல், அழகிய புல்வெளி, எம்.ஜி.ஆரின் அருமையான சுவர் ஓவியங்கள் என கண்ணையும், மனதையும் கவரும் வகையில் இந்த நினைவு இல்ல வளாகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த நினைவு இல்லம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் அளவுக்கு பொலிவு பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு பளிங்கு சிலையும், அவரின் தாய் சத்தியபாமா, தந்தை கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பளிங்கு சிலைகளும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.
எம்.ஜி.ஆரின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அரிய காட்சிகள் அடங்கிய ஒளி நாடாக்கள், அவரது ஆட்சிக்கால சாதனைகளின் ஒளிநாடா காட்சிகள், அவரது அபூர்வ புகைப்படங்களின் கண்காட்சி, எம்.ஜி.ஆர். நடித்த வெற்றி திரைப்படங்களின் சி.டி.க்கள் வெளியீடு என பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதுதவிர எம்.ஜி.ஆர். குறித்த பல்வேறு பிரபலங்கள், எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் பார்வையிடவும், அவர்கள் விரும்பினால் தங்குவதற்கும், எம்.ஜி.ஆர். பக்தர்கள் தங்கள் இல்ல திருமணங்களை நடத்துவதற்கும், சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாறவும் உரிய வசதிகள் செய்யப்பட உள்ளன. வழிநெடுக பல்வேறு திருத்தலங்களுக்கு செல்பவர்கள், தரிசித்து செல்லும் மற்றொரு திருக்கோவிலாக எம்.ஜி.ஆர். இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தை கேரளா மாநில கவர்னர் பி.சதாசிவம் வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.
நம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள நம் அன்புத்தலைவன் வாழ்ந்த நினைவு இல்ல திறப்பு விழாவில் நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள், அபிமானிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த நினைவு இல்லத்தை 26-ந் தேதி முதல் தினமும் பொதுமக்கள் பார்வையிட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி பற்றி விவரங்கள் அறிய 9884612307 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.