கேரளாவில் ஆளும் கட்சி அலுவலகத்தில் பெண் கற்பழிப்பு – போலீசார் விசாரணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட செர்புளசேரி பகுதியில் கடந்த 16-ந்தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அதன் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரே அந்த குழந்தையை பெற்றெடுத்து வீசிச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 10 மாதங்களுக்கு முன் கல்லூரி விழா மலர் தயாரிப்பதற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த இளம் கட்சித்தொண்டர் ஒருவர் தன்னை கற்பழித்ததாகவும், அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை எனவும் போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவர்கள், இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண்ணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகவும், அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் உள்ளூர் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் ஒன்றில் பெண் தொண்டர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த சம்பவத்தை கண்டித்து செர்புளசேரி கட்சி அலுவலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள் கற்பழிப்பு மையங்களாக மாறி வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.