கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு – சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த ஒரு நாள் பாதிப்பில் பாதிக்கு மேல் நோயாளிகள் கேரளாவில் மட்டும் கண்டறியப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 64 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 63 ஆயிரத்து 98 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது.

மாநிலத்தில் மலையோர மாவட்டங்களில்தான் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3679 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 2752 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2619  பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வராதது ஏன்? என்பது பற்றி கண்டறிய மத்திய சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை கேரளாவுக்கு அனுப்பியது.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் எஸ்.கே.சிங்  தலைமையிலான குழு கேரளாவில் ஆய்வு செய்து நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. இதற்கிடையே கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் பரிசோதனைகள் நடப்பதன் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களை  தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 3 வாரங்களில் இங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்காகவே சனி, ஞாயிறு நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொது  இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை  குறைந்த நபர்களுடன் நடத்த வேண்டும்.

மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு  சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools