Tamilசெய்திகள்

கேரளாவின் 6 மாவட்டங்களில் பலத்தை மழைக்கு வாய்ப்பு

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் முன்கூட்டியே தென்பட்டன. இதனால் மே மாதம் மத்தியில் பருவமழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அந்தமான் கடல் பகுதியிலும் அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. இதையடுத்து பருவமழையை எதிர்கொள்ள அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் தான் அரபிக்கடலில் டவ்தே புயலும், வங்க கடலில் யாஸ் புயலும் தோன்றியது. இரு புயல்களும் கரையை கடந்த நிலையில் வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது.

இதன்காரணமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிபோனது. அதோடு கோடை மழையும் பெய்தது. தற்போது கோடை மழை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப கேரள கடற்பகுதியிலும், தென்கிழக்கு அரபி கடல் பகுதியிலும் மழை மேகங்கள் திரள தொடங்கின.

இதன்காரணமாக தென்மேற்கு பருவமழை இன்று பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மழை இயல்பான அளவுக்கே இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அடுத்து கேரள அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பருவ மழை தொடங்கியதும் கேரளாவின் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

6 மாவட்டங்களிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.