X

கேம் ஓவர் (Game Over) – திரைப்பட விமர்சனம்

அஸ்வின் சரவணன் இயக்கத்தில், டாப்ஸி நடிப்பில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘கேம் ஓவர்’ (Game Over) எப்படி என்பதை பார்ப்போம்.

சென்னையில் தனியாக இருக்கும் பெண்கள் தலை வெட்டப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, ஒரு வருடம் ஆகியும் கொலையாளிகளை போலீஸ் பிடிக்காமல் இருக்கிறது.

இதற்கிடையே, வீடியோ கேம் தயாரிப்பு நிபுணரான டாப்ஸி, பெரிய வீட்டில் தனியாக வசிக்கிறார். அவருக்கு உறுதுணையாக வீட்டு வேலை செய்யும் வினோதினி மட்டுமே இருக்கிறார். அப்பா, அம்மா இருந்தும் அவர்களை பிரிந்து தனிமையில் வாழும் டாப்ஸி, திடீரென்று இருட்டை பார்த்து பயப்படுவதோடு, அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார். அவருக்கு புத்தாண்டு தினத்தில் நேர்ந்த கசப்பான சம்பவத்தை நினைத்து பயப்படுவதோடு, தற்கொலையும் செய்துக்கொள்ள முயற்சிக்கிறார். அதே சமயம், அவரது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவின் மூலம் அவர் உயிர் பிழைப்பதோடு, அந்த டாட்டூ எதையோ அவருக்கு உணர்த்த முயற்சிக்கிறது. இதனால் குழப்பமடையும் டாப்ஸி, மர்ம மனிதன் அவரை கொடூரமாக கொலை செய்வது போல கனவு காண்கிறார்.

இப்படி பல விதமான குழப்பங்களோடு தடுமாற்றம் அடையும் டாப்ஸியின், வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸுகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

மர்ம மனிதர்களால் கொடூரமாக கொலை செய்யப்படும் பெண்களில் ஒருவரது ஆன்மா, டாப்ஸியும் அதே மர்ம மனிதர்களால் கொலை செய்யப்படப் போவதை அவருக்கு உணர்த்துகிறது. அதை உணராத டாப்ஸி, தனக்கு மன ரீதியாக பிரச்சினை இருப்பதாக நினைத்து வருத்தமடைவதோடு, தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை நினைத்து வருந்துகிறார். ஒரு கட்டத்தில் அவருடன் இருக்கும் அந்த ஆன்மா மூலம் அனைத்தையும் புரிந்துக்கொள்பவர், தனக்கு வரும் ஆபத்தை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார், என்பது தான் இப்படத்தின் நேரடி கதை. ஆனால், இதை இப்படி நேரடியாக சொல்லாமல், அனைத்து விஷயங்களையும் மறைமுகமாக சொல்லி, திரைக்கதையை வித்தியாசமான முறையில் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

அவரது வித்தியாசமான கதை சொல்லல் முறை சிலருக்கே புரியும்படி இருக்கிறது. பொதுஜன மக்களுக்கு இப்படம் ஒரு புரியாத புதிராகவே இருக்கும்.

காவியா ராம்குமார், அஸ்வின் சரவணன் ஆகியோரது எழுத்துக்களில், பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை நினைத்து துவண்டு போகாமல், அதை எதிர்த்து நின்று தைரியமாக போராட வேண்டும், என்ற அட்வைஸை மறைமுகமாக சொல்லியிருந்தாலும், அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

தனுஷ், ஆர்யா போன்ற ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த டாப்ஸிக்கும், இந்த டாப்ஸிக்கும் ரொம்பவே வித்தியாசம் தெரிகிறது. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கும் டாப்ஸி, தனது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்தாலும் அதை ரொம்ப எளிமையாக கையாண்டு ரசிக்க வைக்கிறார்.

ரோன் ஈத்தன் ரோகன் இசை, வசந்தின் ஒளிப்பதிவு மற்றும் கெவினின் எடிட்டிங் ஆகியவை நமக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் படத்தின் ஆரம்பத்தில் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளும் டாப்ஸி, கண்ணில் கருவி ஒன்றை மாட்டிக்கொண்டு, பரிசோதிக்கும் காட்சி சாதாரணமானதாக இருந்தாலும், அதிலேயே மிரட்டி விடுகிறார்கள். க்ளைமாக்ஸ் நெருங்கும் போது டாப்ஸியின் கனவில் வரும் மர்ம கொலையாளிகளும், அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கும் காட்சிகளும் படம் பார்ப்பவர்களை பீதியடைய செய்துவிடுகிறது.

படத்தில் நடக்கும் கொடூர கொலைகள், டாப்ஸிக்கு நடந்த சோகமான சம்பவம், டாப்ஸியின் கனவில் வரும் மர்ம மனிதர்கள், என்று எதற்கும் விரிவான விளக்கம் கொடுக்காமல், என்ன நடந்திருக்கும் என்பதை படம் பார்ப்பவர்களே புரிந்துக்கொள்ள வேண்டும், என்ற நிலையில் இயக்குநர் அஸ்வின் சரவணன் படத்தை இயக்கி இருப்பது சற்று புதுமையாக இருந்தாலும், நம்ம மக்களுக்கான ஒரு படமாக இந்த ‘கேம் ஓவர்’ நிச்சயம் இருக்காது.

இது இதனால் தான் நடந்தது. இதற்காகவே இது நடந்தது, என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரே மாதிரியான படத்தை கொடுக்க விரும்பாத இயக்குநரின் இந்த புதிய முயற்சியை பாராட்டினாலும், ஒட்டு மொத்த ரசிகர்களுக்கான ஒரு படமாக இப்படத்தை நிச்சயம் பாராட்ட முடியாது.

மொத்தத்தில், இந்த ‘கேம் ஓவர்’ (Game Over) ஒரு சிலருக்கான படமாகவே உள்ளது.

-ஜெ.சுகுமார்