கேப்டன் பதவி எளிதில் கிடைக்கவில்லை – விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில் அளித்து கூறியதாவது:-

இந்திய அணிக்குள் நுழைந்ததில் இருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன்.

டோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயல்பட்டேன். அதாவது அவர் விக்கெட் கீப்பர், முதலாவது ஸ்லிப்பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றெல்லாம் ஆட்டம் தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.

இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோலியால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘டோனி விலகி விட்டார், அடுத்து அணியின் கேப்டன் நீங்கள் தான்’ என்று தேர்வாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் கேப்டன் பொறுப்புக்கு என்னை டோனி பரிந்துரைத்திருக்கிறார். எனவே இந்திய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டதில் டோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

இவ்வாறு கோலி கூறினார்.

டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு குறுகிய வடிவிலான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் டோனி ஒதுங்கினார். இதனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் கோலி முழு நேர கேப்டனாகி விட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news