கேப்டனாக டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் 106 ரன்னில் சுருண்ட பின்னர், இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி 32 ரன்னைத் தொட்டபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஐந்தாயிரம் ரன்களை கடந்தார். ஐந்தாயிரம் ரன்களை கடந்த அவருக்கு 86 இன்னிங்சே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து முதல் இடத்தில் இருந்தார். விராட் கோலி தற்போது அதை முறியடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிளைவ் லாய்டு 106 இன்னிங்சிலும், தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 110 இன்னிங்சிலும், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டன் 116 இன்னிங்சிலும், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெமிங் 130 இன்னிங்சிலும் ஐந்தாயிரம் ரன்களை கடந்துள்ளனர்.