கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் 1689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவமுத்து என்பவர் பொதுநல வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் காரணமாக கேன் குடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
எனவே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:-
நிலத்தடிநீர் எடுப்பதை கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் ஆலை தொடங்குவோர்களுக்கே இந்த சட்டம் பொருந்த வேன்டும். ஆனால் 2014-ம் ஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலை நடத்துபவர்களும் உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு அதற்கான வழிவகைகளை காணும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் இதுவரை வழி வகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுக்க பாதுகாப்பான பகுதி, அபாயகரமானது, மிகவும் அபாயகரமானது, அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட பகுதி என பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. ஒரு ஆழ்குழாய் கிணறுக்கும், அடுத்த ஆழ்குழாய் கிணறுக்கும் 175 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன. இதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் வாங்க முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் தமிழகம் முழுவதும் 1300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் கேன் குடிநீர் உற்பத்தியை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 1689 குடிநீர் ஆலைகளும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பி.ஐ.எஸ்.யிடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு சான்றிதழுடன் இயங்குகின்றன. நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்கக்கோரி வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் முரளி கூறியதாவது:-
குடிநீர் தேவைக்காக மட்டுமே நாங்கள் நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின் தேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலைகள் எளிய முறையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்படி செயல்படும் எங்கள் ஆலைகளை மூடினால் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்போர் எண்ணிக்கை அதிகமாகி விடும். இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர் கேன் சப்ளையும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.