X

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றது பெருமையாக இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரான்சில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ம் தேதி தொடங்கியது. வருகிற 28ந்தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்பட வேண்டும் என்பதும் சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதில், முதன்முறையாக கவுரவத்திற்கான நாடாக அதிகாரப்பூர்வ முறையில் இந்தியாவின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியா சார்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ளது.

அதன் தொடக்க விழாவில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, மூத்த இயக்குனர் சேகர் கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர்கள் மாதவன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று, இந்த விழாவில் தென்னிந்திய நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் இந்திய குழுவினரின் ஒரு பகுதியாக கலந்து கொண்டனர். அதன்படி நடிகர் மாதவன் தயாரிப்பில் உருவான ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தமிழில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது பற்றி அவர் கூறும்போது, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏதேனும் ஒன்றை பிரபலப்படுத்துவதற்காக நான் வரவில்லை. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதியாக வந்துள்ளேன். இந்திய திரைப்படங்களை கொண்டாடும் ஓர் இந்திய நடிகையாக நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பது உண்மையில் எனக்கு கவுரவம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.