X

கேன்டிடேட் செஸ் போட்டி – 5 வது சுற்றில் குகேஷ் வெற்றி

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.

மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.