கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது – தோல்வி குறித்து டுபெலிசிஸ் கருத்து
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது.
நேற்று முன் தினம் 2 ஆட்டங்கள் நடந்தது. முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 206 ரன் இலக்கை எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. கேப்டன் டு பெலிசிஸ் 57 பந்தில் 88 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோலி 29 பந்தில் 41 ரன்னும் (1பவுண்டரி , 2 சிக்சர் ), தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 32 ரன்னும் ( 3 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தனர்.
பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது.
பனுகா ராஜபக்சே 22 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிகர்தவான் 29 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மயங்க் அகர்வால் 24 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஒடியன் சுமித் 8 பந்தில் 25 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), தமிழக வீரர் ஷாருக்கான் 20 பந்தில் 24 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியதாவது:-
வெற்றிக்கான 2 புள்ளிகள் மிகவும் முக்கியமானது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நாங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம்.
பனி துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பெங்களூர் அணிக்கு கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை கொடுத்து விட்டோம். எங்கள் வீரர்கள் திறமையை சரியான முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டுபெலிசிஸ் கூறும்போது, “10 ரன் இருக்கும் போது ஒடியன் சுமித் கேட்சை தவறவிட்டோம். அவர் உண்மையிலேயே மிகவும் சிறந்த அதிரடி வீரர் ஆவார். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது” என்றார்.