கென்னடி கிளப்- திரைப்பட விமர்சனம்
சுசீந்திரன் இயக்கத்தில், பாரதிராஜா, சசிகுமார் ஆகியோரது நடிப்பில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படம் எப்படி என்று பார்ப்போம்.
கென்னடி கிளப் என்ற கபடி குழுவை நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரரான பாரதிராஜா, அதன் மூலம் ஏழை பெண்களுக்கு தனது சொந்த பணத்தை செலவு செய்து கபடி பயிற்சி அளிப்பதோடு, அவர்களை தேசிய வீராங்கனைகளாக உயர்த்தவும் முயற்சித்து வருகிறார். அப்போது மாநில அளவிலான போட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது, பாராதிராஜாவால் தொடர்ந்து பயிற்சி அளிக்க முடியாத சூழல் ஏற்படும் போது, அவரிடம் கபடி பயிற்சி பெற்றவரும், ரயில்வே அணி வீரருமான சசிகுமார், கென்னடி கிளப் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, அவர்களை மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறவும் செய்கிறார். இதற்கிடையே கென்னடி கிளப் அணியில் இருக்கும் வீராங்கனை ஒருவர் இந்திய அணிக்கு தேர்வாக, அவரிடம் தேர்வுக் குழு அதிகாரி லஞ்சமாக ரூ.30 லட்சம் கேட்கிறார். இதனால், அந்த வீராங்கனையால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகிறது.
இந்த நிலையை மாற்ற நினைக்கும் சசிகுமார், தேர்வுக்குழு தலைவரின் ஊழலை அரசுக்கு தெரியப்படுத்தவும், கென்னடி கிளப் வீராங்கனைகளை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற செய்யவும் களத்தில் இறங்குபவர் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே, அத்துறைகளில் இருக்கும் ஊழல் மற்றும் அதனால் திறமையானவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மையப்படுத்தி தான் கதை நகரும். அப்படி ஒரு வழக்கமான பார்மெட்டில் இப்படத்தின் கதையும் இருப்பது தான் இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
சசிகுமார் மற்றும் பாரதிராஜா இருவரும் படத்திற்கு தேவையில்லையோ, என்று எண்ணும் அளவுக்கு அவர்களது கதாபாத்திரமும், நடிப்பும் இருக்கிறது. இருவரும் கபடி பயிற்சியாளர்களாக மனதில் நிற்பதற்கான காட்சிகள் இல்லாமல் போவது பெருத்த ஏமாற்றம். அதிலும், இருவருக்குமிடையே ஏற்படும் ஈகோ அல்லது புரிதல் இல்லாத சூழல், திரைக்கதைக்கு எநதவிதத்திலும் சுவாரஸ்யம் சேர்க்கவில்லை.
கபடி வீராங்கனையாக வருபவர்களின் பின்னணி ஏழ்மை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. அதையும் ஏதோ மாண்டேஜ் போல காட்டுவதால் அழுத்தமில்லாமல் போகிறது.
கபடி பயிற்சியாளராக இருந்தாலும், பரோட்டாவை வைத்து காமெடி செய்திருக்கும் சூரி, ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். கபடி வீராங்கனையை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் அந்த வாலிபரின் எப்பிஷோட் முழுவதும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், திருமணம் முடிந்த அன்றே போட்டிக்காக மனைவியை வெளியூருக்கு அனுப்பிவிட்டு பீல் செய்யும் போது, ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்ந்து போகிறது.
டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவு தான் கைகொடுத்திருக்கிறது. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் கபடி போட்டிகள் தத்ரூபமாக இருக்கிறது.
நேர்த்தியான கதை இல்லை என்றாலும், கபடி போட்டிகளில் சினிமாத்தனம் இல்லாமல், நிஜமான போட்டிகளகாவே இயக்குநர் சுசீந்திரன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். வழக்கமான விஷயங்களை தவிர்த்துவிட்டு, உள்ளூர் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதில் கபடி விளையாட்டை உட்புகுத்தி ‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் வெற்றி பெற்ற இயக்குநர் சுசீந்திரன், இந்த ‘கென்னடி கிளப்’ படத்தில் அப்படி ஒரு வித்தியாசம் குறித்து யோசிக்க கூட இல்லை, என்பது தெளிவாக தெரிகிறது. கபடி தான் கதைக்களம் என்றாலும், அதை சொல்வதற்காக இயக்குநர் பயன்படுத்திய யுக்தி ரொம்பவே பழசாக இருக்கிறது.
படத்தில் எந்தவிதமான ட்விஸ்ட்டும், சுவாரஸ்யமும் இல்லை என்றாலும், கபடி போட்டி காட்சிகள் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘கென்னடி கிளப்’ குழுவின் ஆட்டத்திற்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
-விமர்சன குழு