கெட்டுப் போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் மரணம்! – அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு டாக்டர்கள் மற்றும் சில அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்னும் அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், முறையான சீதோஷ்ணத்தில் பராமரிக்கப்படாததால் பழையதாகிப்போன ரத்தத்துக்கு, அது பாதுகாப்பானது என்று டாக்டர்கள் சான்று வழங்கியதுதான். இது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், “தகுதியற்ற ரத்தத்தை ஏற்றியதும் பெண்களுக்கு உடனடியாக பல்வேறு பிரச்சினைகள் உடலளவில் எழும். சில நிமிடங்களில் வலிப்பு வந்ததுபோல் உடல் வெட்டி வெட்டி இழுக்கும். சிலருக்கு 50 மில்லிக்கும் குறைவான அளவில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையக அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் நாராயணசாமி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.ருக்மணி ஆகியோருக்கு பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடமை தவறிய குற்றத்துக்காக தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அப்பீல் விதிகளின் கீழ் அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு நர்சுகள் மற்றும் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

ரத்த வங்கி சோதனைகள் குறித்து விவரித்த சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “புதிய ரத்தத்துக்கும், பழையதாகி தகுதியிழப்பு ஏற்பட்டுள்ள ரத்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை, மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை” என்றார்.

ஆஸ்பத்திரிகளில் ரத்த சேமிப்பு வங்கியில் இருக்கும் பிரத்யேகமான குளிர்சாதனப் பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர் பராமரிக்கப்பட வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டால், உடனே இயங்கக்கூடிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு அதே குளிர் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். இதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் சேமிக்கப்படும் ரத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துபோவதோடு, அவை அப்படியே கரைந்து போய்விடக்கூடிய அபாயமும் ஏற்பட்டுவிடும். அப்படி மாற்றங்கள் ஏற்படும்போது அந்த ரத்தம் தனியாகத் தெரிந்துவிடும்.

சேமிக்கப்படும் ரத்தத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் அதை டாக்டர்கள் உடனடியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். அதிகபட்சமாக ரத்தத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாத வகையில் 42 நாட்கள் பாதுகாக்க முடியும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news