கூட்ட நெரிசலை தவிர்க்க மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றம்
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் உள்ளது. சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி வழித்தடங்களில் சுமார் 500 மின்சார ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்ளுக்கு செல்வோர் அதிக அளவில் மின்சார ரெயில்களில் பயணம் செய்வார்கள் என்பதால் கூட்டம் அதிகம் காணப்படும். சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் சில மின்சார ரெயில்களை தவிர, மற்ற அனைத்து ரெயில்களும் 12 பெட்டி மின்சார ரெயில்களாக இயக்கப்படுகின்றன.
ஆனால், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 60 சதவீத மின்சார ரெயில்களில் மட்டுமே 12 பெட்டிகள் உள்ளன. மீதமுள்ள 40 சதவீத ரெயில்கள், 9 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் அனைத்து மின்சார ரெயில்களையும் 12 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் செல்ல வசதியாக, அனைத்து மின்சார ரெயில்களும் 12 பெட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
12 பெட்டிகள் நிற்கும் வகையில், பெரும்பாலான மின்சார ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது. சில ரெயில் நிலையங்களில் நடக்கும் பணிகளும் விரைவில் முடிந்து விடும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மின்சார ரெயில்களும், 12 பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.