கூட்டணி விவகாரம்! – பா.ஜ.கவுக்கு சிவசேனா எச்சரிக்கை
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இழுபறியில் உள்ளது. சிவசேனாவுடன் தேர்தல் கூட்டணி வைக்க விரும்புவதாக சமீப நாட்களாக பா.ஜனதா பல தடவை தெரிவித்தது. ஆனால், சிவசேனாவோ அதை பற்றி பேசவே இல்லை. பா.ஜனதா அரசை வசைபாடுவதிலேயே குறியாக உள்ளது.
இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தனது மாதோ இல்லத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த சஞ்சய் ராவத் எம்.பி.யிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:
மராட்டியத்தை பொறுத்தவரை கூட்டணியில் எப்போதும் சிவசேனா கட்சி தான் பெரிய அண்ணனாக செயல்பட்டது. இனியும் பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் சிவசேனாவே பெரிய அண்ணனாக செயல்படும். அவர்கள் (பா.ஜனதா) கூட்டணி வைக்க விரும்பினால் எங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பேச்சுவார்த்தைக்காக யாராவது அழைப்பு விடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.
வருமான வரி விலக்கை ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். பொதுப்பிரிவில் நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. பின்னர் ஏன் அவர்களுக்கு வருமான வரி விலக்கிலும் ரூ.8 லட்சம் அனுமதிக்க கூடாது.
மேலும் மாநிலத்தில் நிலவும் வறட்சி, ரபேல் போர் விமான முறைகேடு தொடர்பாக வரும் தேர்தல் பிரசாரத்தில் பேசுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் ஜல்னாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் பேச்சுக்கு சுடச்சுட பதில் அளித்துள்ளார்.
அதில், “பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. நாங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலும், ஊழலுக்கு எதிராக போராடவே கூட்டணி அமைக்க விரும்புகிறோம். 60 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட குண்டு, குழிகளை வெறும் 5 ஆண்டுகளில் சரிசெய்ய முடியாது. நாங்கள் இந்த வேலையை தொடர விரும்புகிறோம்” என்றார்.
2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சிவசேனா, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டியே அந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பிளவு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.
தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.