கூட்டணி குறித்த இறுதி முடிவை மு.க.ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. தங்களது கட்சியை வளர்க்க அ.தி.மு.க.வை மிரட்டி குரல்வளையை நெரித்து தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப்பினும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் வளராது.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இது வரை பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில கருத்துக்களை கூறிவருவது ஏன் என்று புரியவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று கூறிய பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கமலஹாசன் கூட்டணியில் சேரவேண்டும் என்று கூறியது ஏன்? என்று தெரியவில்லை

கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் பல கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று நிருபர்கள் கேட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் 39 தொகுதிகளையும் கேட்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools