Tamilசெய்திகள்

கூட்டணி அமையா விட்டால் தனித்து போட்டி! – டிடிவி தினகரன்

சேலத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் குற்றவாளி என்பதால் நினைவிடம் கட்டக்கூடாது எனவும், உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்று இருப்பார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டு வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி எனக்கூறி கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

இவ்வாறு பேசியவர்களுடன் கூட்டணி வைக்கும் இவர்களை (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

இந்த கூட்டணி பலவீனமான கூட்டணி. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். அவர்களின் கூட்டணி தற்கொலைக்கு சமமான கூட்டணி. அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பு தோற்றுப்போகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் இவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சமூகநீதி போராளிகள் என்று நினைத்தேன். அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் பா.ம.க.வினர் என்ன நினைப்பார்கள்? என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றாக சேர்ந்துள்ள இவர்கள் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள்.

அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர். எங்களுக்கு கிளைகள் இல்லாத ஊர் எதுவும் இல்லை. அந்த வகையில் கட்சியை வளர்த்துள்ளோம்.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பிரதமர் யார்? என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *