கூட்டணியை ஆட்சியை பிரதமர் மோடி கவிழ்க்க திட்டமிடுகிறார் – சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். இந்த ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்து, 2-வது ஆண்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா நடத்தி வரும் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா புதிய திட்டத்துடன் முயற்சி செய்ய தொடங்கியுள்ளது. ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள்.
பிற கட்சி எம்.எல்.ஏ.க்கள் தாமாக வந்தால் அவர்களை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தான் முயற்சி செய்கிறது. இதன் பின்னணியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் செயல்படுகிறார்கள். பண பலம், அதிகார பலத்தை கொண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.
மக்கள் அந்த கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு வழங்காதபோதும், பின்வாசல் வழியாக பா.ஜனதா ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது. ஆட்சி அதிகாரத்திற்காக கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அது முடியவில்லை. காங்கிரசில் இருந்து வேறு எந்த எம்.எல்.ஏ.வும், ராஜினாமா செய்ய மாட்டார்கள். கூட்டணி அரசு 100 சதவீதம் உறுதியாக உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.