தமிழ் மாநில காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் சந்திக்கும், என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொள்ளாச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் முக்கிய தொழிலான தென்னை விவசாயம் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் தொகையை உயர்த்திவழங்கவேண்டும், சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டும். பொள்ளாச்சிக்கு கூடுதலாக ரெயில்களை இயக்கவேண்டும்.
2017-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என புகார் உள்ளது. விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கவேண்டும். பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கிவருகின்றன. வறட்சியால் தற்போது மூலப்பொருட்கள் கிடைக்காமல் தென்னைநார் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.
எனவே தென்னை நார் உற்பத்தியாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டிகளை தள்ளுபடிசெய்யவேண்டும். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது. ஆகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.
ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். அது மக்கள் விரும்பும் கட்சியாக இருக்கும். அ.தி.மு.க. அரசு தனது செயல்பாட்டை இன்னும் உயர்த்தவேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.