கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேசிய சந்திரபாபு நாயுடு – தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு மூன்றாவது வாய்ப்பை வழங்க வேண்டும் . ஆந்திராவில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . தெலுங்கு மக்களுக்கு மூலதனம் இல்லாததால் வெட்கப்படுகிறேன். ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியையும் மாநிலத்தையும் , பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டார்.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்துள்ளனர். நேற்று புங்கனூரில் கலவரம் ஏற்படுத்திவிட்டனர். சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர ரெட்டியின் கைக்கூலியாகிவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மட்டுமே கூட்டணியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடந்த பா.ஜனதா கூட்டணிகள் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என பேசி உள்ளார். இதன் மூலம் அவர் தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர முதல்அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளிக்கவில்லை. அவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

2 கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிப்பதால் ஆந்திர மாநிலத்தில் யார் வெற்றி பெற்றாலும் பா. ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools