சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பார்க்கிங் கட்டணம் மூலம் தினமும் ரூ.1.5 லட்சம் வரை வாடகை கட்டணம் மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.
இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவை உள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
பார்க்கிங் கட்டணம் மூலம் மட்டும் தினமும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலாகிறது. இதே போல் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தேவை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். தற்போது 5 ஆயிரம் இடங்கள் உள்ளது. ஆய்வுக்கு பின்னர் இது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றனர்.