Tamilசெய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 3, 4-வது அணு உலையில் தற்காலிக என்ஜினீயர் பதவிக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு நடந்தது. இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பி.இ. பட்டதாரிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இதில் சமீபத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வேலை வழங்கப்படவில்லை. வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இது கூடங்குளம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களிடமும் புகார் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சி மணிஅரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவு வாயிலில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜான்சி ரூபா மற்றும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கூடங்குளம் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து பெருமளவில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேச்சுவார்த்தைக்குப்பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருந்தாலும் உள்ளூர் மக்கள் மீண்டும் போராட்டம்  நடத்த வாய்ப்புள்ளதால், இன்று அணுமின் நிலையம் நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.