குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.