குழுக்கள் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டுப்பாடு இல்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குழுக்களாக பயணம் செய்வதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்ய பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளையும் தெற்கு ரெயில்வே விதித்திருந்தது. இதனால் சுற்றுலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குழுக்களாக செல்வோர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமம் இருந்தது.

மேலும் அவர்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு மைய கண்காணிப்பாளர், நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அவர்களும் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்குவார்கள். அந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டுமானால், ரெயில்வே கோட்ட மேலாளர் அனுமதி பெறவேண்டும்.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே அந்த கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தி உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கல்வி, சுற்றுலா, விளையாட்டு போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மொத்தமாக டிக்கெட்களை முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் இருந்தது. இந்த நிலையில் அந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த வகுப்பில் வேண்டுமானாலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் ராஜஸ்தானி, சதாப்தி, டொரண்டோ, மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களிலும் பயணம் செய்ய மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள முன்பதிவு மைய கண்காணிப்பாளர் அல்லது நிலைய அதிகாரியின் அனுமதி பெற்றால் போதுமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools