நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் கொல்லிமலையில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ராசிபுரத்தை அடுத்த தட்டான் குட்டை, காட்டூரை சேர்ந்த கூட்டுறவு சங்க உதவியாளர் ரவிச்சந்திரன் (வயது 55), இவரது மனைவி அமுதவள்ளி (முன்னாள் நர்சு உதவியாளர்), ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் ஈரோட்டை சேர்ந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா, லீலா, பவானி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 குழந்தைகள் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வழக்கின் முக்கியத்துவம் கருதி தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. (சென்னை) டி.எஸ்.பி. ராஜா சீனிவாசன் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கிருஷ்ணன் (சேலம்) தலைமையிலான போலீசார் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சித பிரியாவை வரவழைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரித்தனர்.
பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் சுஜாதா, கற்பகம், மணிகண்டன், சாரதி, கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் 3 பேர் என 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதுபோல் கொல்லிமலை பவர்காடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் சாரதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர்கள் அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மேலும் தொடர்ந்து கொல்லிமலை பகுதியில் விசாரணை நடத்த உள்ளனர்.
குழந்தை விற்பனை கும்பல் தலைவி அமுதவள்ளி உள்பட 8 பேரையும் தனித்தனியாக 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக இன்று நாமக்கல் நீதிமன்றத்தில் டி.எஸ்.பி. கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக கைதான அமுதவள்ளி (முன்னாள் நர்சு உதவியாளர்) உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.