Tamilசெய்திகள்

குழந்தைகள் பிறப்பு 42 சதவீதமாக குறைந்தது

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

முடிந்தவரை அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

எனவே குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. அது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகின.

இந்த நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு சென்னையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சி இணையதள பதிவின் படி கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 7 ஆயிரத்து 30 குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த வருடம் (2021) ஏப்ரல் மாதத்தில் சென்னை நகரில் 4 ஆயிரத்து 94 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. மருத்துவமனைகள் அனுப்பும் குழந்தைகள் பிறப்பின் சான்றிதழ்கள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகின்றன.

நகரில் பிறந்த குழந்தைகளுக்கான 99 சதவீத பிறப்பு சான்றிதழ்கள் 21 நாட்களுக்குள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் சென்னை நகரில் இந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு பிப்ரவரி மாதம் 30 சதவீதமும், மார்ச் மாதம் 30 சதவீதமும் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் குழந்தைகள் பிறப்பு 42 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தொற்று நோய், நிலையில்லாத எதிர்காலம், வேலை இழப்பு, அடிக்கடி ஆஸ்பத்திரி செல்ல பயப்படுவது ஆகிய காரணங்களினால் பிறப்பு விகிதம் குறைந்து இருக்கலாம் என்று மக்கள் தொகை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மகப்பேறியல் மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் தொடங்கிய போது தம்பதிகள் வீட்டில் இருப்பதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாகலாம் என்று எதிர்பார்த்தோம். என்றாலும் கொரோனா தாக்கம் பற்றிய முழுவிவரம் தெரியாததால் குழந்தைகள் பெறுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்கினோம்.

இதை பெண்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டனர். பல்வேறு கருத்தடை வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர். பல இறப்புகள், நோய் தொற்றை கண்டதால் பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பெறுவதை தள்ளி வைத்துள்ளனர். இதனால் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.