X

குழந்தைகள் தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் வைத்த பள்ளி கல்வித்துறை

நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில அளவில் குழந்தைகள் தின கொண்டாட்ட விழா நடைபெற உள்ளது. அதேபோல், ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் குழந்தைகள் தினம் தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14-ந் தேதி) இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களுடைய செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வையுங்கள். குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருங்கள். இதை ஏதோ அன்றைய ஒருநாளுக்கு மட்டும் செய்யாமல், வாரத்திலோ அல்லது மாதத்திலோ கடைப்பிடியுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், www.gadgetfreehour.com என்ற இணையதளத்தில் பெற்றோர் சென்று அதில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அன்றைய தினத்தில் அந்த இணையதளத்தை சென்று பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளுக்கு பதில் அளிக்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

Tags: south news