Tamilசெய்திகள்

குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்த 10 பேர் கைது!

குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது சர்வதேச அளவில் குற்றச்செயலாக கருதப்படுகிறது.

எனவே இவ்வாறு பகிர்பவர்கள் மீது அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் அதையும் மீறி குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது தொடர் கதையாக உள்ளது.

இது சம்பந்தமாக சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் இந்தியாவிலும் இதேபோல குழந்தைகள் ஆபாச படங்களை பலர் பகிர்ந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகள் உதவியுடன் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரித்து வந்தது.

அப்போது இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 14 மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சர்வதேச அளவில் நெட்வொர்க் அமைத்து சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள், குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோரும் இந்த குரூப்பில் இணைந்து இருந்தனர். 100 நாடுகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு இணைந்திருந்தார்கள். அவர்களும் படங்களை பகிர்ந்ததுடன் இங்கிருந்தும் படங்கள், ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள், டெக்ஸ்ட் தகவல்கள் ஆகியவற்றை பெற்றிருந்தனர்.

இதற்காக 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குரூப்கள் மற்றும் பல்வேறு சமூக வலைதள குரூப்களை அவர்கள் அமைத்து இருந்தார்கள். இதன் மூலம் படங்கள் அனுப்பப்பட்டன.

இதையடுத்து 23 வழக்குகளை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஆபாச படம் அனுப்பிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 83 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி கூறியதாவது:-

சி.பி.ஐ. சோதனை நடத்திய இடங்களில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அவர்கள் பயன்படுத்திய மின்னணு சாதனங்கள், லேப்டாப்புகள், மொபைல் போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்வேறு வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதள குரூப்களை உருவாக்கி அதன் மூலமாக ஆபாச படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இதில் வெளிநாட்டினர் தான் அதிகம் பேர் உள்ளனர். இந்தியர்களும் அதில் இடம் பெற்று இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூலமும் ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர மேலும் பலரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. இதுவரை இந்தியா மற்றும் 100 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் இதில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

வெளிநாட்டினரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை கேட்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்திய இடங்களில் அடையாளம் காணப்பட்ட நபர்களிடம் மீண்டும் உங்களிடம் விசாரணை நடத்துவோம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட சாதனங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

அப்போது அவர்களும் கைது செய்யப்படுவார்கள். எனவே இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்துதான் அதிகமாக குழந்தைகள் ஆபாச படங்கள் பகிரப்பட்டது தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் கொஞ்சலாலுன், மாவ், சாந்தவ்லி, வாரணாசி, காசிபூர், சித்தார்த்தாநகர், மொராதாபாத், நொய்டா, ஜான்சி, காசியாபாத், முசாபர்நகர் ஆகிய 11 இடங்களில் இருந்து ஆபாச படத்தை அனுப்பி இருந்தனர். எனவே அந்த நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல குஜராத்தில் ஜூனாகர், பாவ்நகர், ஜாம்நகர், பஞ்சாபில் சங்க்ரூர், மலேர்கோட்லா, கோஷியாபூர், பாட்டியாலா, பீகார் மாநிலத்தில் பாட்னா, சிவான், அரியானாவில் யமுனா நகர், பானிபட், சிர்சா, ஹிசார், ஒடிசாவில் பாட்ராக், ஜஜாபூர், தேன்கனனால் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆஜ்மீர், ஜெய்பூர், ஜுன்ஜூனா, நாகர் ஆகிய இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் குவாலியரிலும், மகாராஷ்டிரத்தில் ஜல்கா, சல்வாத், துலே ஆகிய இடங்களிலும், சத்தீஸ்கரில் கோர்வா என்ற இடத்திலும், இமாசல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த படங்கள் எப்படி கிடைத்தன? யார், யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள். அப்போது பலர் இதில் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல அந்தந்த நாடுகளிலும் விசாரணை நடைபெறும். எனவே உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் சிக்க உள்ளனர்.

இந்த கும்பலில் பாகிஸ்தான், கனடா, வங்காளதேசம், நைஜீரியா, இந்தோனேசியா, ஆஜர்பைஜான், அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, ஏமன், கானா, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகமாக படங்கள் பகிரப்பட்டுள்ளன.

சி.பி.ஐ. போலீசார் 45 நாட்களுக்கு முன்பே விசாரணையை தொடங்கி விட்டார்கள். முழுமையான தகவல்களை சேகரித்ததற்கு பின்புதான் நேற்று சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

தற்போது ஆந்திராவை சேர்ந்த மோகனகிருஷ்ணா, ஒடிசாவை சேர்ந்த ஜூப்ளி நாயக் ஆகியோர் இதில் முக்கிய பங்காற்றியது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பிய நியாஸ் அகமது மீர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான குழந்தைகள் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டன.

அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட்டில் ராம் பவன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அது சம்பந்தமான வீடியோ படங்களை எடுத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல இந்தியாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் அனுப்பிய விவகாரத்தில்  பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் பெரிய அளவில் குற்றம் நடந்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது.