குழந்தைகளை விற்கும் ஓய்வு பெற்ற நர்ஸ்? – போலீஸார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக தெரிகிறது.

குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற நர்ஸ் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அந்த நர்ஸ், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார்.

இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் தற்போது அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை வாங்கி, விற்றது உண்மையா? அல்லது தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறீர்களா? என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news