Tamilசெய்திகள்

குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ள தமிழக அரசு!

கொரோனா 3-வது அலை மிக மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அக்டோபர் மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தை எட்டும் என்றும் கூறி வருகின்றனர். 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதையொட்டி தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையொட்டி கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மாநில அளவிலான சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:-

தலைவர்-மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

உறுப்பினர் செயலர்- எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.

உறுப்பினர்கள்-தேசிய சுகாதார சிறப்பு திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கழக நிர்வாக இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், கிராமப்புற சுகாதார பணிகள் இயக்குனர், பொது சுகாதார மருத்துவக் கழக இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு டாக்டர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு டாக்டர், இந்திய குழந்தைகள் நல தமிழக தலைவர், செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் நல செயலாளர் தங்கவேலு ஆகிய 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த குழு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.