குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒடுக்குவதற்காக, ‘பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்’ (போக்சோ) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை கடுமை ஆக்குவதற்காக, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தீவிர பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்தம் சேர்க்கப்பட்டது. குழந்தைகள் ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை விவரங்களும் சேர்க்கப்பட்டன.
இந்த ‘போக்சோ’ திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர், “மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு இருப்பதால், இதை மேலும் ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, நிலைக்குழுவுக்கோ அல்லது தேடல் குழுவுக்கோ அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவாதத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
இது, ஓட்டு வங்கி அரசியல் தொடர்பானது அல்ல. இந்தியாவின் எதிர்காலத்தை காப்பது தொடர்பானது. நாட்டின் 39 சதவீத மக்கள்தொகைக்கு, அதாவது 43 கோடி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைத்து குழந்தைகளுக்கும் இம்மசோதா சட்ட பாதுகாப்பு அளிக்கும்.
குழந்தைகள் ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்படும். ஒருவர் நடத்தும் குழந்தைகள் ஆபாச இணையதளத்தை 5 ஆயிரம்பேர் பின்தொடர்கிறார்கள். சிறுமி கற்பழிப்பு கூட அதில் காட்டப்படுகிறது. இவையெல்லாம் கவலை அளிக்கக்கூடியவை.
பாலியல் ரீதியாக துடிப்பாக செயல்பட வைப்பதற்காக, குழந்தைகளுக்கு போதை மருந்துகளும், ஹார்மோன்களும் செலுத்தப்படுகின்றன. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம், ‘போக்சோ’ திருத்த மசோதா நிறைவேறியது. கட்சி எல்லைகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஏற்கனவே மாநிலங்களவையிலும் நிறைவேறி விட்டதால், பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது.