Tamilசெய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்!

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தான். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது திருவிழா கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

முதல் நாள் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டிச் சென்றனர். பின்னர் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்க புறப்பட்டு சென்றனர். முன்னதாக வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் நீராடி புனித நீர் எடுத்துச் சென்றனர்.

தசரா திருவிழாவையொட்டி விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

அதனை தொடர்ந்து 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேசுவரர் கோவில், அபிஷேக மேடை, கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா வருதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவிலுக்கு வந்த பின்னர், திருவிழா கொடி இறக்கப்பட்டு, பக்தர்கள் காப்பு களைந்து தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.

10-ந் தேதியன்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *