தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தாற்போல் மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் 26-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 5-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது.
தசரா திருவிழாவிற்கு வேடம் அணியும் பக்தர்கள் 90 நாட்கள், 60 நாட்கள், 48 நாட்கள், 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள். இந்த நிலையில் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.
தசரா திருவிழாவில் காளி, முருகன், விநாயகர், அனுமான், போலீசார், பெண், நர்ஸ், குறவன்- குறத்தி, முனிவர் உள்பட பல்வேறு வேடங்களை அணிவார்கள். கோவில் கொடியேற்றம் நடைபெற்ற பின்பு காப்பு அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் சேர்ந்து காணிக்கை பிரித்து கோவிலில் செலுத்துவார்கள்.
மேலும் மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் மதியம் ஒருவேளை மட்டுமே பச்சரிசி சாதத்தை உணவாக சாப்பிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தசரா திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.