குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள் – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்கள். ஆனால் பல இடங்களில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை கூட தமிழக அரசு பறித்து விட்டது. இது தொடர்பாக கவர்னரை சந்தித்து முறையிடுவோம்.
மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை தேவை என்பதையும் கவர்னரிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க. குழுவினர் கிண்டி ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்கள்.
இந்த குழுவில் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கார்த்தியாயினி, ஆனந்தி பிரியா, முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி, திருப்பதி நாராயணன், ஏ.ஜி.சம்பத், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டு பிடிக்க போவது இல்லை. அதனால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை. அதை கவர்னரிடம் நாங்கள் வைத்திருக்கிறோம்.
சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் துறை அமைச்சரோ, முதல்வரோ இன்னும் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. திராவிட மாடல் ஆட்சி மக்களை எப்படி மதிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. குற்றவாளிகள் யார் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களை பாதுகாக்கவே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மடியில் கனமில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு சம்மதிக்க வேண்டியதுதானே.
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.