குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை நீட்டித்து புழல் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார். அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், நீதிபதி இந்த மனு மீது விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.