நாட்டின் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது புதிய தொற்று குறைந்தபோதிலும், உயிரிழப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன. இரண்டாம் அலையில், பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில் இதுவரை 270 டாக்டர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு பலியானார்.
அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 78 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 37 பேரும், டெல்லியில் 29 பேரும், ஆந்திராவில் 22 பேரும் பலியாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு (கொரோனா முதல் அலை) நாடு முழுவதும் 748 டாக்டர்கள் உயிரிழந்தனர். ஆனால், தற்போதைய இரண்டாவது அலையில் குறுகிய காலத்திற்குள் 270 டாக்டர்களை இழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது, குறிப்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுகிறது என்று இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயலால் தெரிவித்தார்.