Tamilசெய்திகள்

குரூப்-4 தேர்வு – தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4, குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தேர்வில் பல அதிரடி மாற்றங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கடலூர் அருகே உள்ள கிராமமான கிழக்கு ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இதில் முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வு சம்பந்தமாக விசாரணைக்கு நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 பேரும், கடலூர் கிழக்கு ராமாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தேர்வுக்கு முன்னதாகவே பல லட்சம் ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இவர்களில் ஒரு குடும்பத்தில் தலா 2 பேர் வீதம் 3 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் சில அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக புகார் எழுந்து இருப்பதால், ஏற்கனவே குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதானவர்கள், தொடர்புடையவர்களாக கூறப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார் கூறப்பட்ட 12 பேரும் ஒரே கிராமத்தில் ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்பதால் இதில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் கூறப்பட்ட புகாரின் உண்மை தன்மையை அறிவதற்காக குறிப்பிட்ட 12 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருக்கிறோம். விசாரணையின் முடிவில் தான் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்களா? அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது தெரியவரும். குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 12 பேரும் பத்திரப்பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, நிலஅளவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருந்து வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *