குரூப்-4 தேர்வு – சான்றிதழ்கள் பதிவேற்றம் குறித்து அதிகாரி விளக்கம்
குரூப்-4 தேர்வில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டியவர்கள் யார்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 12-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட தங்களது சான்றிதழ்களின் நகல்களை கடந்த 13-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் (நாளை) தேர்வாணைய இணையதளத்தில், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவித்து இருந்தது.
இந்த செய்தி சில தேர்வர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏற்கனவே இந்த தேர்வுக்கு என்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி முதல் அந்த மாதம் 18-ந்தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.
அவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வந்தால் போதுமானதாகும். தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய 27 பேருடைய பதிவு எண்கள் 12-ந்தேதியன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலின் கீழே 47-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.