குரூப் 2 தேர்வு மோசடி – மேலும் 3 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து பதிவான வழக்கில் பலரை சி.பி. சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூரைச் சேர்ந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் காவலர் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர் மூலமாக பணியில் சேர்ந்த அவரது அண்ணன் வேல்முருகன், ஜெயராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சுதாதேவி, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியரான சுதா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர்கள் மூவரும் தலா 9 லட்சம், 8 லட்சம், 7 லட்சம் ரூபாயை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் கொடுத்து குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவதாக சிபிசிஐடி தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.