குரூப்-1 பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 18 துணை கலெக்டர், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், 3 மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மாதம் (ஜூலை) வெளியிட்டது.
அதன்படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 92 காலிப் பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 30-ந் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தகட்டமாக நடைபெற இருக்கும் முதன்மைத்தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.