Tamilசெய்திகள்

குரங்கு அம்மை பரிசோதனை கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகள் தீவிரம்

கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளதால் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவலை ‘உலகளாவிய சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. முதலில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் மேலும் 2 பேர், டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இதில் டெல்லியில் பாதிப்புக்கு உள்ளானவர் எந்தவித சர்வதேச பயணமும் மேற்கொள்ளாதவர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், தொண்டை புண், இருமல், தலைவலி, உடல் சோர்வு, கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சு திணறல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் 6 முதல் 13 நாட்களில் தீவிரம் அடையலாம் எனவும் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த நோய் அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு, இணை நோய் பாதிப்பு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள், ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்ளும் நபர்களை எளிதில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குரங்கு அம்மைக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கிடையாது. என்றாலும் பெரியம்மை வைரஸ் போலவே இதுவும் இருப்பதால் அந்த தடுப்பூசியே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 80 சதவீதம் தீர்வு கிடைக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே குரங்கு அம்மை நோயை பரிசோதனை செய்வதற்கான கருவிகளை தயாரிக்கும் பணிகள் இந்தியாவில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி குரங்கு அம்மையை பரிசோதனை செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தான் இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வகம் உள்பட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட 15 ஆய்வகங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் மூலமே குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பரிசோதனை கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவாவை சேர்ந்த மால்பியோ டயக்னாஸ் டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.