Tamilசெய்திகள்

குரங்கு அம்மை நோய் பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் சர்வதேச பயணிகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நோய் இந்தியாவிலும் பரவியது. அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று பரவியது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த நாடுகளில் இருந்தும், ஒட்டி உள்ள பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று அம்மை பரவிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. இந்நோய் பாதித்துள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அம்மை நோய் கொப்பளம் போல உருவாகும். அது உடலில் இருந்து விழும் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்கள். நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் இயல்பு நிலைக்கு செல்வர். ஆனால் இதுவரையில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாதிப்புள்ள நாடுகள் மட்டுமின்றி எல்லையோர பகுதி, மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோனை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.